Friday, September 23, 2011

சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles ).....

Projector mobilesபுரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுடபத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனிலிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எந்த இடத்திலும் பெரிது படுத்திப் பார்க்க வழிசெய்திருக்கிறார்கள். இதனால் எதேனும் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள படங்களை பெரிதாகப் பார்த்து மகிழலாம்.

இந்த வகையிலான மொபைல்கள் புதிய தொழில்நுட்பம் என்பதால் இன்னும் அதிகமான மாடல்கள் வரவில்லை. சிறப்பான புரஜெக்டர் சேவைக்கு என்ன வேண்டும் எனப்பார்க்கலாம். எந்த வீடியோ பார்மேட்டை (Video format) புரஜெக்டர் காட்டக்கூடியது, ஒளிப்பட பார்மேட்(Picture Formats), மொபைல் திரையளவு(Display), தெளிவான வீடியோ (Video brightness) மற்றும் தரம் போன்றவற்றைச் சோதித்து வாங்குவது நலமானது. தற்போது சிறப்பாக உள்ள புரஜெக்டர் போன்களைப் பற்றி பார்க்கலாம்.

1.Intex V Show Projector Phone 8810

இன்டெக்ஸ் நிறுவன போன்கள் வழக்கமாக இரட்டை சிம் வசதியுடையன. இதிலும் இரட்டை சிம் வசதியுடன் இரட்டை மெமரி கார்டு ஸ்லாட் (Dual Memory slot) வசதியிருக்கிறது. இரண்டிலும் தலா 8 GB வரை போட்டுப் பயன்படுத்தலாம்.
இதன் தொடுதிரையளவு 3.2”. படங்களை தியேட்டரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருமாம்.இதனுடன் போனை வைத்து புரஜெக்ட் செய்ய Tripod Stand தரப்படுகிறது. விலை Rs. 12000

2.Samsung Galaxy Beam i8520

இது ஒரு சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் வகையைச் சார்ந்தது. இதன் DLP WVGA புரஜெக்டர் சிறப்பான முறையில் படங்களைக் காட்டக்கூடியது. மேலும் இதன் 8 MP கேமராவில் படமெடுக்கும் போதே புரஜெக்ட் செய்யும் வசதியிருக்கிறது. உயர்தர HD வீடியோக்களை எடுக்கவும் உதவும்.

இது சாதாரண புரஜெக்டர் போன் மட்டுமில்லாது ஆண்ட்ராய்டு 2.1 இயங்குதளம், வை-பை, 3G, 3.7” தொடுதிரை போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் விலை Rs. 35000

3. Spice Popcorn Projector M9000

குறைந்த விலையில் தரமான வசதிகளோடு ஸ்பைஸ் நிறுவனம் பாப்கார்ன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மொபைலில் இரண்டு சிம் வசதியுள்ளது. இதில் பலவகையான வீடியோ மற்றும் ஒளிப்பட வகைகளையும் தெளிவாக காட்டக்கூடிய வசதியிருக்கிறது. லைவ் டீவி மொபைலில் பார்த்தால் அதையும் புரஜெக்ட் செய்யலாம். இந்நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலம் விற்பனை நன்றாக உள்ளது. இதன் விலை 6000 ருபாய் மட்டுமே.

4.TechBerry ST 200

இந்த மொபைல் போனில் இரண்டு சிம், இரண்டு மெமரிகார்ட் ஸ்லாட்கள், இரண்டு கேமரா வசதியிருக்கிறது. இதன் தொடுதிரை அளவு 3.2” ஆகும். இதன் கேமரா 2MP மற்றும் பிளாஷ் வசதி கொண்டது. இதன் 2000 mAh பேட்டரி அதிக நேரம் நீடிக்கக் கூடியது. இதன் விலை Rs. 11000

5. Intex V Mini theatre 8809

இண்டெக்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதிய மொபைலான இதில் புரஜெக்டர் காட்சியமைப்பு தெளிவாக இருக்கிறது. இரட்டை சிம் வசதி, 2.4” தொடுதிரை அளவு, 2MP கேமரா போன்ற வசதிகளையும் 3gp, avi, mp4 போன்ற வீடியோ வகைகளை காட்டும் வசதியும் கொண்டது. இதன் விலை 6200 ருபாய். இது ஸ்பைஸ் நிறுவனத்தின் பாப்கார்ன் மொபைலின் போட்டியாக கருதப்படுகிறது...

Thursday, September 8, 2011

ஓணம் பண்டிகை கொண்டாடும் மலையாள நடிகர், நடிகைகள்....

மலையாள நடிகர்,  நடிகைகள் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள். இதற்காக வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு கேரளா வந்திருந்தனர்.
ஓணம் கொண்டாட்டம் குறித்து அசின் கூறியதாவது,
ஓணம் பண்டிகையை கொண்டாட ஜெய்ப்பூரில் நடந்த போல்பச்சன் படப்பிடிப்பில் இருந்து இரண்டு நாள் விடுமுறை வாங்கி விட்டு வந்தேன்.’ஓணம்’ பண்டிகையை பெற்றோருடன் சேர்ந்து கொண்டாடுவதே பிடிக்கும்.
உறவினர்கள்,   நண்பர்களை வீட்டுக்கு அழைத்துள்ளேன். ஓணத்துக்காக பட்டு பாவாடை,  சட்டை வாங்கி அணிந்தேன்.
வண்ணமயமான பூக்கோலங்கள் வாசலில் இடுவது இப்பண்டிகையின் ஸ்பெஷல். என் அம்மா ஓணம் பண்டிகையையொட்டி செய்யும் பாயாசம் ரொம்பவும் ருசியானது.
வாழை இலையில் விதவிதமான உணவுகள்,  மற்றும் பாயாசம் வைத்து கடவுளுக்கு படையலிட்டு விட்டு சாப்பிடும் இந்த நாள் மறக்க முடியாதது.  இவ்வாறு அவர் கூறினார்.
ஓணம் கொண்டாடிய நடிகை அமலாபால்,
ஓணம் பண்டிகையின் போது புதுவிதமான பூக்கோலம் போடுவது எனக்கு பிடித்த விஷயம். சிறுவயதில் இருந்தே இதை செய்கிறேன். கல்லூரியில் படித்த போது ஓணத்துக்கு பூக்கோலம் போடுவதில் தோழிகளுக்குள் போட்டியே நடக்கும்.
அது மறக்க முடியாத நினைவுகள். பெற்றோருடன் ஓணத்தை கொண்டாடுகிறேன் என்றார்.
பாவனா கூறும்போது,
கன்னட படப்பிடிப்புக்காக கொழும்பில் இருப்பதால் ஊருக்கு போக முடியவில்லை. ஆனாலும் இங்கு படக்குழுவினருடன் அப்பண்டிகையை கொண்டாடினேன் என்றார்.
நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால்,  பிருதிவிராஜ் ஆகியோரும் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள்.

குணச்சித்திர நடிகை காந்திமதி மரணம்....

பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
எம்.ஜி.ஆர்.,  சிவாஜி,  ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி,   கமல்,   விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.
இவரது வசன உச்சரிப்பு வெகு பிரபலமானது. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜாவின் படங்களில் தவறாமல் நடித்து வந்தார்.
நகைச்சுவை,   வில்லத்தனம்,   குணச்சித்திரம் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்தியவர் காந்திமதி.
கரகாட்டக்காரன் படத்திலும் இவரது வேடம் வெகுவாகப் பேசப்பட்டது. கடந்த 2000மாவது ஆண்டு இதய நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தேறினார்.
பின்னர் தீவிர சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். டிவியில் நடித்து வந்தார்.  காந்திமதி,  சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
சென்னை வடபழனியில் வசித்து வந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது மகன் தீனதயாளன் அறிவித்துள்ளார்.
காந்திமதியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Wednesday, September 7, 2011

காணொளி மூலம் கலெக்டரிடம் புகார்!!!!

விழா மேடையில்
மதுரையில் ‘தொடுவானம்’ திட்டம் கடந்த 20-ம் தேதியன்று மிகச் சிறப்பாக துவங்கி வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் கனவுத் திட்டம் இது.
‘தமிழ் உலகம் அறக்கட்டளை’ என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் ஆர்வலருமான ஆல்பர்ட் பெர்ணாண்டோ இந்த தொடுவானம் திட்டம் சாத்தியமாக பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இணைய வல்லுநரும், தமிழ் இணைய முன்னோடியுமான கோபாலகிருட்டிணன், செல்வ. முரளி, நாகமணி ஆகியோர் இணைய தள வடிவமைப்பு மற்றும் தொடுதிரை வடிவமைப்பில் பாடுபட்டிருக்கிறார்கள்.  திருநாவுக்கரசு, பேராசிரியர் சரவணன், கவிதாயினி மதுமிதா, திருப்பதி, ‘சங்கமம்’ விஜய்,  கவிஞர் துரை.ந.உ, பஜ்ரங்கபதி, ப்ரித்பால்சிங் ஆகியோர் தமிழ் உலகம் அறக்கட்டளையின் சார்பில் தன்னார்வலர்களாக பயிற்சியளித்தார்கள்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் இவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
துவக்க விழாவன்று காணொளியின் மூலம் கிராமப்புறத்திலுள்ள மூதாட்டி ஒருவரிடம் பேசினார் கலெக்டர். தனக்கு முதியோர் உதவித் தொகை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் தன்னைக் கவனித்துக் கொள்வதில்லை என்றும் அவர் கலெக்டரிடம் கூறினார். “உதவித் தொகைக்கு ஆவண செய்கிறேன். உனது மகனையும் சட்டப்படி உள்ளே தள்ள ஏற்பாடு செய்கிறேன்” என்று கலெக்டர் கூறியவுடன், “ஐயா, அவனை எதுவும் செய்துடாதீங்க” என்று அந்த மூதாட்டி அவசர அவசரமாக மறுத்தார். அதான் தாய்ப் பாசம்!
இதே போல மேலும் ஒரு சிலர் காணொளி மூலம் கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்கள். அனைத்திற்கும் உடனடி ஆக்‌ஷன் எடுக்க உத்தரவிடப்பட்டது!
@thoduvanam என்ற ட்வீட்டர் ஹேண்டில் மூலமாக ட்வீட்டரில் மேற்படி நிகழ்வை தொடர்ந்து கொண்டிருந்த இணைய தள நேயர்கள், “முதல்வன் திரைப்பட பாணி அசத்தல் இது” என்று கமெண்ட் அடித்தார்கள்.  இதனையும் கலெக்டரிடம் கூறிய போது, “அப்படியெல்லாம் இல்லைங்க. மக்களுக்கு எதுவுமே தடை படக்கூடாது. அவர்களுக்கு நல்லது செய்யத்தான் நாம் இருக்கிறோம். தமிழக அரசு ஏராளமான நலத் திட்டங்களை மக்களுக்காக அறிவித்துக் கொண்டிருக்கிறது. அதன் பலன் அடித்தட்டு மக்களுக்கும் தங்கு தடையின்றி எடுத்துச் செல்லும் பணி தான் என்னுடையது!” என்றார் தன்னடக்கமாக!
தொடுவானம் நிகழ்ச்சி மதுரையில் வெற்றிகரமாக துவங்க  உதவி ஆட்சியர் ராஜாராம், ஆட்சியரின்  உதவியாளர் சிவக்குமார், பஞ்சாயத்து உதவி இயக்குனர்  ரம்யாதேவி, உதவியாளர் சங்கரநாராயணன், ஓட்டுநர் கோபால் ஆகியோர் இராப்பகலாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் மற்றும் அனைத்து அலுவலகர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளும் தமிழ்பேப்பர் சார்பில்!
இந்தத் திட்டம் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே அவா! முதல்வர் கவனம் எடுக்க வேண்டும்!
***
’சத்துணவுத் திட்டம்’ போலவே விரைவில் காலையிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப் படவிருக்கிறதாம்!
காமராசர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத்திட்டத்தை இன்னமும் பரவலாக பலரும் பயன் பெரும் வகையில் மாற்றியமைத்து ‘சத்துணவுத் திட்டம்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தி ஒரு அமைதிப் புரட்சியை உண்டு செய்தார் எம்.ஜி.ஆர்.
மதிய உணவுடன் முட்டை, முட்டை சாப்பிடாமல் முரண்டு பிடிப்பவர்களுக்கு வாழைப்பழம் என்று சத்துணவுத் திட்டம் பல பரிணாம வளர்ச்சிகளை அடைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது சத்துணவை எப்படி ருசியாக வழங்குவது என்று பிரபல சமையல் கலை வல்லுநர் தாமோதரன் மூலமாக வகுப்புகள் எல்லாம் கூட எடுக்கப்பட்டது.
தமிழகத்தை முன்மாதிரியாக வைத்து பல மாநிலங்களிலும் இப்போது சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இப்போது தமிழக அரசு காலை உணவையும் பள்ளிகளில் வழங்கலாம் என்று யோசித்து வருகிறதாம். திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது.
அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் இலவசங்களை ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் உண்மையிலேயே மிக நல்ல திட்டம். வரவேற்க வேண்டிய திட்டம்! வரவேற்போம்!
***
அரசியல், திரையுலகம், கல்வி இவைகளைத் தவிர வளம் கொழிக்கும் துறை ஒன்றும் நம் நாட்டில் இருக்கிறது. அதான் வழிபாட்டுத் தலங்கள். ஒருவேளை விளக்கு ஏற்ற தீக்குச்சி வாங்கக்கூட காசு இல்லாத பல்லாயிரக்கணக்கான கோவில்களும் இருக்கின்றன. அதே சமயத்தில் உண்டியலில் விழும் சில்லறையை மெஷின் வைத்து திணறத் திணற எண்ணும் கோவில்களும் இருக்கின்றன.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழகத்தின் பெரும்பாலான கோவில்கள் இருக்கின்றன. இந்தத் துறை ஆரம்பிக்கப்பட்ட அன்றே கோவில்களில் அரசியல் புகுந்து விட்டது.
என்றைக்கு அரசியல் புகுந்ததோ அன்றைக்கே மரியாதையும் வெளியேறி விட்டது. மன அமைதிக்காகத்தான் மக்கள் இருக்கும் இடத்தை விட்டு கோவிலுக்குச் செல்கிறார்கள். அங்கே வாசலிலிருந்து கருவறை வரை கிடைக்கும் ‘மரியாதை’ பெரும்பாலான நேரங்களில் தன்மானத்தைச் சீண்டுவதாகவே அமைந்து விடுகிறது. வீட்டிலேயே கடவுளை நினைத்து நிம்மதியாக இருந்திருந்தால் கூட அந்த மன சங்கடங்கள் மிச்சமாகியிருக்கும். என்ன செய்வது? ஆட்டு மந்தைக் கூட்டங்களுக்கு எத்தனை பட்டாலும் திருந்த மனம் வராது தான்!
சரி.. விஷயத்துக்கு வருவோம்.
இனிமேல் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களை மனம் நோகாமல் வரவேற்று, தரிசனம் செய்து திரும்பச் செய்ய வேண்டும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறதாம். இதற்காக திருக்கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம். அதே போல கோவில் பணியாளர்களுக்கு யூனிஃபார்ம் வழங்கும் திட்டமும் அரசுக்கு இருக்கிறதாம். அர்ச்சகர்களுக்கும் இந்த பயிற்சி, யூனிஃபார்ம் வழங்குவார்களா?!
***
கடந்த ஆட்சியில் தோட்டா தரணியின் பேருதவியால் பெரும் செலவில் கட்டப்பட்ட தலைமைச்செயலகத்தை, ‘அரைகுறை கட்டிடம்’ என்று இந்த அரசில் கண்டு கொள்ளவேயில்லை!
இப்போது மேற்படி மவுண்ட் ரோடு தண்ணித் தொட்டியை ’சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை’யாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘அம்புட்டு செலவு செய்து கட்டிய கட்டிடம் வேஸ்டாகப் போய் விட்டது’ என்று இனிமேல் யாரும் நாக்கு மேல் பல்லு போட்டு பேச முடியாது.
‘நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டிடம் அது” என்று ஏதோ ஒரு உலகப் புகழ்பெற்ற காலேஜில் படித்து இன்ஜினியர் பட்டம் பெற்ற முன்னாள் முதல்வர் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், “அந்தக் கட்டிடம் ஸ்ட்ராங்கா இல்லைன்னு சொல்லிட்டு தானே பழைய தலைமைச் செயலகத்துக்கே போனாங்க. அந்த ஓட்டைக் கட்டிடத்திலேயா மருத்துவமனையும், காலேஜும் கொண்டு வரப் போறாங்க?” என்று திமுகவினர் கேட்கும் கேள்வி செம லாஜிக்! இதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு! எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம்!!

ஜம்மு வரை ‘அம்மா’.......



‘நம்பிக்கை சின்னமாம் தும்பிக்கை நாயகனின் அருளால் வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தவழட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறையட்டும். திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
மற்றவர்களைப் போல நோன்பு கஞ்சியை மட்டும் குடித்து விட்டு வந்து, ரம்ஜானுக்கு ‘ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சிகள்’ என்றும் விநாயகர் சதுர்த்திக்கு ‘விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்’ என்றும் தொலைக்காட்சியில் அறிவிக்க வைக்கும் கேப்மாறித்தனம் இல்லாமல் அனைவரையும் ஒன்றாகப் பாவிக்கும் முதல்வருக்கு வாழ்த்துகள்!
***
அரசியல் சாணக்கியர் என்ற பட்டத்தையும் வெற்றிகரமாக அம்மா வென்று விட்டார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு தண்டனைக் குறைப்பை செய்ய தமிழக அரசுக்கு சட்டப்படி இடமில்லை என்று முதல் நாள் சொல்லி விட்டு, மறுநாள் ‘அவர்கள் தண்டனையைக் குறைக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததன் மூலம் ஒரே பந்தில் சிக்ஸர், ஃபோர் என்று விளாசித் தள்ளி விட்டார். யாருமே எதிர்பாராத திருப்பம் இது!
***
செப்டம்பர்-2-ம் தேதியிலிருந்து சென்னை தவிர எஞ்சிய தமிழகமெங்கும் அரசு கேபிள் தனது சேவையைத் தொடங்குகிறது. சென்னையைத் தவிர ஏனைய இடங்களில் சன் டிவி கட்டண சானல் என்பதால் இப்போதைக்கு சன் டிவியைப் பார்க்க முடியாது. இது சன் டிவிக்கு பிரச்னையாகுமா அல்லது சன் டிவியின் சீரியல்களில் அடிமைப்பட்டு விட்ட மக்கள் அதை விட முடியாமல் அரசு கேபிளை புறக்கணிப்பார்களா என்பது போகப் போகத் தான் தெரியும். ஒரு சில இடங்களில் இந்தப் பிரச்னையால் DTH விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கட்டண சானல்களையும் அரசு கேபிளில் இணைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றதாம். பார்க்கலாம்!
***
அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறதாம். இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இப்போது உருவாகியிருக்கும் சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அக்டோபரில் தேர்தலை நடத்தினால் நல்ல அறுவடை செய்யலாம் என்று ஜெ. முடிவெடுத்திருக்கிறாராம். அதற்குள் இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டமும் நடைமுறைக்கு வந்து விடும் என்பதால் தான் இப்படி ஒரு முடிவு.
திமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கியத் தலைவர்கள் வரிசையாக ‘உள்ளே’ போய்க்கொண்டிருக்கும் நேரம் இது. எனவே இப்போது தேர்தல் வந்தால் களப்பணியாற்றக் கூட யாரும் இருக்க மாட்டார்கள் என்பதும் ப்ளஸ் பாயிண்ட் என்பதால் இப்படி ஒரு முடிவாம்.
எப்படியும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் ‘அம்மா’ தான் அறுதிப் பெரும்பான்மை பெறுவார் என்பது எதிர்பார்க்கும் ஒன்று தான்!
***
‘தமிழக சட்டசபையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது போல ஜம்மு காஷ்மீர் சட்டசபையிலும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்க கோரலாமா?’ என்று கேட்டுள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வழக்கம் போல கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இது எதிர்பார்த்த ஒன்று தான். ஏன் இன்னமும் கசாப்பிற்கும் மன்னிப்பு கேட்டு கோரிக்கை எழவில்லை என்று தெரியவில்லை!
இதற்கு சரியான பதிலடியை முதல்வர் ஜெ. உடனடியாகத் தர வேண்டும்!

சன் டிவி தெரிகிறதா????



கடந்த சில நாள்களாக சென்னை நீங்கலாக ஏனைய தமிழக மக்களுக்கு தலையாயப் பிரச்னை ‘அரசு கேபிளில் சன் டிவி தெரியவில்லை’ என்பது தான்! சன் டிவி உள்ளிட்ட சில சானல்கள் சென்னை தவிர ஏனைய இடங்களில் கட்டண சானல்களாக உள்ளன. எனவே அவற்றை இன்னமும் அரசு கேபிளில் இணைக்கவில்லை. இப்போதைக்கு இலவச சானல்கள் மட்டுமே அரசு கேபிளில் இடம் பெற்றுள்ளன.
சன் டிவியிலே டி.டி.ஹெச். தொழில்நுட்பம் ஆரம்பிச்சதே இந்த மாதிரியான பிரச்னைகள் வந்தால் எப்படி தப்பிச்சுக்கலாம் என்பதற்காகத் தான் என்றும் மக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சன் டிவி பார்க்க முடியாததால் ஓரிரு நாள்களில் டி.டி.ஹெச். வாங்க ஆரம்பித்து விட்டவர்களும் உண்டு.
மக்களின் நாடி பிடித்துப் பார்க்க தவறிவிட்டது அரசு. அவர்கள் ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருக்கும் சானல்களைக் குறைக்காமல் குறைந்த விலையில் இந்த சேவையை வழங்கியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் அரைகுறையாக ஆரம்பித்திருப்பது அரசின் முந்திரிக்கொட்டைத்தனத்தை தான் காட்டுகிறது! கேபிள் பிரச்னைக்கு உடனடியாக ஒரு முடிவு எடுக்காமல் உள்ளாட்சித் தேர்தல் கொண்டு வந்தால் பல இடங்களில் ‘அம்மா’ கட்சி டெபாசிட் இழக்க நேரிடும் என்பது உண்மை!
***
‘ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுகிறார். நீ இருக்கும்போது என்ன செய்தாய் இவர்களைக் காப்பாற்ற? முத்துக்குமார் இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி தீக்குளித்து இறந்தபோது, நாங்கள் போராடியபோது,தெருவில் இறங்கி கொடி பிடித்தபோது போலீசை விட்டு எங்கள் மீது வழக்கு போட்டு எங்களைத் தடுத்தீர்கள். அன்று எங்களை விட்டிருந்தால் போராட்டம் நடத்தி போரைத் தடுத்து நிறுத்தியிருப்போம். செய்யவிடவில்லை. அதனால் ஆட்சியை இழந்தாய். எங்கள் அம்மா முதல்வரானார். தோழி செங்கொடி தீக்குளித்து இறந்தார். இந்த மூன்று உயிர்களை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்ற தெருவில் இறங்கி போராடினோம். எங்கள் மீது எந்த வழக்கையும் போடவில்லை. அதற்கு பதில் மூன்று உயிர்களை காப்பாற்றித் தந்துள்ளார். அவர்தான் தமிழினத்தின் தலைவி’ இப்படி பேசியிருக்கிறார் சீமான். இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள் முதல்வரம்மா?
நம்மூரில் மட்டும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஜெ – கருணாநிதி, ஆரியம் – திராவிடம், அடிப்பொடி – அல்லக்கை என்று இரண்டு தரப்பாக எதிர் தாக்குதல் நிகழ்த்தி பேசாமல் இருக்கவே முடியாது. ஒன்று இந்தப் பக்கம், இல்லாவிட்டால் அந்தப் பக்கம் என்ற முன்முடிவுகளோடு தான் எல்லாமே, எல்லாருமே பேச ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களாகவே எதிர் கருத்து கொண்டவர்களை எதிர் தரப்புக்கு கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள்.
***
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும், தூய்மை பகுதியாக வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதன்படி அனைத்து கோவில்களிலும், வளாகத்தில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தக்கூடாது. பக்தர்களுக்குக் கொடுக்கும் பூஜை கூடை மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கூடையாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல எந்த பூஜை பொருட்களும் பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றியிருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களிலும் இது குறித்து அறிவுப்பு பலகைகளை வைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இதே போல, கடந்த 1ம் தேதி முதல் பெரிய வர்த்தக நிறுவனங்களில் மக்களுக்கு வழங்கப்படும் பொருள்களுக்கான பிளாஸ்டிக் பையை இலவசமாக வழங்கக்கூடாது. அவற்றுக்கும் காசு வாங்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. காசு கொடுத்து வாங்க வேண்டுமென்றால் மக்கள் கண்டிப்பாக அதன் பயன்பாட்டை குறைக்க ஆரம்பிப்பார்கள். நல்ல திட்டம் தான். வரவேற்போம்!
***
‘ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களால் வழிநடத்தப்படும் அரசு என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்காக, ஜெயலலிதாவால் நடத்தப்படுகின்ற ஜெயலலிதா அரசாகத்தான் இந்த ஆட்சி உள்ளது’ என்று குற்றம் சாட்டியுள்ளார் கடந்த ஐந்தாண்டு காலம் மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட ஆட்சியின் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் குறள் எல்லா ஆட்சியர்களுக்கும் சாலப் பொருந்தும். போன முறை எதிர்கட்சியாக இருந்த போதிலும், ஜெ எந்த ஒரு விஷயத்திலும் மக்கள் மத்தியில் இறங்கிப் போராடவில்லை. கொடநாட்டில் சென்று ரெஸ்ட் எடுத்ததோடு சரி. முதல்வர் ஆன பிறகு அந்த ரெஸ்ட் தேவைப்படவில்லை போலிருக்கிறது. ஐந்தாண்டுகளில் மூச்சுக்கு முன்னூறு தடவை கொடநாட்டுக்குப் போன ஜெ இப்போது ரெஸ்ட் எடுக்க தேவையில்லாத பரிபூரண உடல் நலத்துடன் இருக்கிறார் போல. கடவுளுக்கு நன்றி!
ஆனால் இப்போது திமுகவுக்கு எதிர்கட்சி அந்தஸ்தை கூட தமிழக மக்கள் வழங்கவில்லை. அவர்கள் கட்சிக்காரர்கள் வரிசையாக நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே சென்று கொண்டிருக்கும் வேளையில் மக்களிடம் அது குறித்து அரசின் மீது அதிருப்தி எதுவுமே சற்றும் எழவில்லை என்பதிலிருந்தே மக்கள் அந்த நடவடிக்கைகளை வரவேற்கிறார்கள் என்று தானே அர்த்தம்? இந்த வேளையில் பழைய பாட்டான ‘அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை’ என்பதையே தொடர்ந்து பாடினால் மக்களிடம் இன்னமும் அதிக வெறுப்பு தான் ஏற்படும் என்பதை முன்னாள் துணை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே வேளையில் வாரா வாரம் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படம் ரிலீஸ் செய்வதைப் போல வாரம் ஒரு முன்னாள் அமைச்சரை உள்ளே தள்ளியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காவல்துறை செயல்படுவது போலத் தெரிகிறது. இன்னும் ஓரிரு வாரங்களுக்கு இதுவே தொடர்ந்தால், மக்கள் மத்தியில் இது அரசியல் நடவடிக்கைகள் தானோ என்ற பேச்சு எழ ஆரம்பித்து விடும் என்பதையும் முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
***
பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெ. மீது நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இவ்வளவு நாட்கள் வாய்தா வாங்கியே காலம் தாழ்த்தினார் அவர். இப்போது முதல்வர் ஆகிவிட்டபடியால் அந்த வழக்கில் நேரில் ஆஜர் ஆவதிலிருந்து விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் ‘இது விசாரணையை மேலும் தாமதப்படுத்தும் வழி. எனவே விலக்கு அளிக்க முடியாது. எப்போது ஆஜராக முடியும் என்று வருகிற 12-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. எனவே நிதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் ஜெ! என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

இதுதான் காந்தியப் போராட்டமா???


ஊழல் பெருகிவிட்டது என்பதிலும், அரசியல் அமைப்புகளும் அதிகாரிகளும் ஊழல்வாதிகளாகிவிட்டனர் என்பதிலும் அவர்களைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்பதிலும் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கமுடியாது. ஆனால், இருக்கின்றன சட்டங்கள் போதாது என்று சொல்லும்போதும், நிறைவேற்றும் முறைகளில் நிறைய போதாமைகள் இருக்கின்றன என்று சொல்லும்போதும், ஒரு புதிய சட்டம் தேவை என்று வாதிடும்போதும் சில விஷயங்களை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
அண்ணா ஹசாரேவின் போராட்டம் சந்திக்கும் கருத்தியல் பிரச்னை இதுதான். முதலில் அவருடைய வழிமுறையை அலசுவோம். ஊழலை ஒழிக்க ஒரு வடிவத்தினைக் கொடுத்து இதை இப்படியே நிறைவேற்றித் தர வேண்டும் என குடியரசு அமைப்பான நாடாளுமன்றத்தில் அண்ணா முறையிடுகிறார். முறையிடுகிறார் என்பதைவிட நிர்பந்திக்கிறார் என்பது பொருத்தமான பிரயோகமாக இருக்கும். இதைத்தான் காந்திய வழிப் போராட்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
யாரையும் நான் துன்புறுத்தவில்லை, என்னை நானே வருத்திக் கொள்கிறேன். இதில் தியாகம் அடங்கியிருக்கிறது. எனது கோரிக்கை தனி மனித ஆசை இல்லை. தேசம் முழுவதும் ஒருமித்த குரலில் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. அதனை நான் ஒருங்கிணைத்தேன். எனவே இது அமிம்சைப் போராட்டம். காந்தியின் வாதம் இது. அண்ணாவும் இதையே செய்வதால், அவருடைய போரட்டமும் காந்திய வழிப் போராட்டம் என்றே அறியப்படுகிறது.
ஆனால் நடைமுறை சாத்தியங்களை யோசிக்காத அல்லது யோசித்தும் அதைக் குறித்து கவலைப்படாத போராட்டத்தை காந்தியத்தின் பெயரால் அழைப்பது சற்று விந்தையாகவே இருக்கிறது. ஒரு மசோதா தாக்கலாகி சட்டம் என்னும் நிலையினை அடைவதற்கு, கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
ஒரு கோரிக்கை மசோதா வடிவம் பெற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கே நடைமுறைகளைக் கடந்து ஒப்புதலைப் பெறுகிறது. பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குச் செல்கிறது. அவரது ஆலோசனைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை மேற்கொண்டு விவாதிக்கவேண்டியிருந்தால் மீண்டும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. விவாதங்கள் நடைபெறுகின்றன. குறிப்பிட்ட வடிவம் ஏற்கப்படுகிறது. அல்லது, திருத்தப்படுகிறது. இந்த வடிவம், மீண்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குச் சென்று, ஒப்புதல் பெறப்பட்டு பிறகே சட்டமாகிறது.
ஆனால் அண்ணா, அதெல்லாம் கூடாது என்கிறார். நான் கொடுப்பதை அப்படியே நிறைவேற்று என்கிறார். நடைமுறை சாத்தியங்களும், முறைகளும் அவர்களுக்கு முக்கியமாகப்படவில்லை. இது எப்படி காந்திய வழியாகும்?
நாடாளுமன்ற நடைமுறைகளைக் கருத்தில் கொண்டே அரசும் பிரதமரும் அண்ணா ஹசாரேயின் குரலுக்கு அப்படியே செவிசாய்க்காது இருந்தனர். பல கட்சிகள் அங்கம் பெற்றுள்ள நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து, இறுதி வடிவம் காண வேண்டிய ஒரு பொருண்மையின் மீது, அவ்வண்ணம் செய்யாது எந்த உறுதி மொழியும் தர இயலாது எனும் யாதார்த்தத்தைதான் பிரதமர் அண்ணா ஹசாரேவுக்குப் புரிய வைக்க முயன்றார்.
நாடாளுமன்றம் ரிஸல்யூஷன் எனும் அளவில் அண்ணா ஹசாரே குழுவினருக்கு தகவல் தெரிவித்தவுடன் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. விவாதித்து ஓட்டெடுப்பு நடத்தி அதன் பிறகு மோஷன் என தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அண்ணாவின் பக்கமிருக்கும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே குறிப்பிட்டதை இங்கே கவனிக்கவேண்டும். இரண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
பொது மக்கள் கருத்தை அறியாது, அவர்களது பிரதிநிதிகள் சொல்வதை வைத்து சட்டம் இயற்றலாமா?
நாடாளுமன்ற நடைமுறையில் நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் போன பின்பு ஒரு மசோதாவின் வடிவம் அரசிதழில் வெளியாகி, பொது மக்கள் கருத்துகளை வரவேற்று நாளிதழில் விளம்பரங்கள் வருவதை கவனித்திருக்கலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது எப்படி? சமூக அமைப்புகள் நிலைக்குழுவிடம் நேரிடையாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வு, அதன் அறிக்கைகள் ஆகியவற்றை விளக்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அமைச்சரவையின் முன்பு தங்கள் தரப்பினை சொல்லவும் வாய்ப்பளிக்கப்பட்டது . இந்த நடவடிக்கைகளை முன்னின்று செயலாற்றிய திருமதி அருணா ராய், இப்போது அண்ணாவின் பக்கம் இருக்கிறார். ஆனால் அண்ணாவின் பிடிவாதங்களோடு ஒத்துப் போகாமால் இருக்கிறார்.
எந்த ஒரு சட்டமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்துகளுக்கு முரண்படாதிருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஹசாரே முன் வைக்கும் ஜன் லோக்பாலின் அம்சங்களை அரசமைப்பு சட்டத்தின் ஷரத்துகளோடும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் வழிகாட்டுதல்களோடும் பொருத்திப் பார்க்கும் போது, சில சிக்கல்கள் தெரியவரும். அண்ணா ஹசாரேவின் மசோதாவை திருத்தமின்றி ஏற்கவேண்டுமனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும். நடைமுறையில் இருக்கும் கிரிமினல் சட்டங்களிலும் நிர்வாக சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அல்லது அவற்றை அடியோடு கைவிடவேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் திருத்தம் என்பது பெரும்பாலான சமயங்களில் நாடாளுமன்ற நடவடிக்கை எல்லைக்குள் முடிந்து விடும். சில ஷரத்துகளை திருத்தும் சமயம் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் பாதி அவற்றின் சட்ட மன்றங்கள் மூலம் குறிப்பிட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நடைமுறையில் இருக்கும் கிரிமினல், நிர்வாகச் சட்டங்களைத் திருத்துவதும் கைவிடுவதும் சுலபமல்ல. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவை, குடியரசு தலைவர், கவர்னர் என்று பல கட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியிருக்கும். இந்தக் கட்டங்களைத் தாண்டி, சட்டங்கள் திருத்தப்பட்டுவிட்டால் அல்லது கைவிடப்பட்டுவிட்டால், அந்தச் சட்டங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் என்ன ஆகும்?
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசுத் தரப்பு அண்ணாவின் கோரிக்கையை அப்படியே ஏற்பதற்கு பதில், விவாதிக்கலாம் என்று முடிவு செய்தது. அண்ணாவின் உண்ணாவிரதமும் முழக்கங்களும் பாடல்களும் முடிவடைந்தன. கூட்டம் கலைந்தது.
பிரச்னை என்னவென்றால், அண்ணாவுக்காகத் திரண்ட கூட்டத்தினருக்கு இந்தச் சிக்கல்கள் புரியவைக்கப்படவில்லை. கிரண்பேடி, அண்ணா ஹசாரேவுக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேலி செய்து முக்காடு போட்டுக் கொண்டு நடித்துக் காண்பித்தார். போகட்டும். அண்ணா, அண்ணா என்று குரல் கொடுத்தபடி திரண்டு வந்த மக்கள் யோசித்திருக்கவேண்டும் அல்லவா?
சமசரம் இன்றி இந்தப் போராட்டம் தொடர்வதற்கான சாத்தியங்கள் என்ன? அண்ணாவின் மசோதா நிறைவேற கடந்து செல்ல வேண்டிய தூரம் என்ன? போராட்டத் தலைமை இந்தத் தடைகளை எப்படிக் கடந்து செல்லப்போகிறது? அதன் செயல்திட்டம் என்ன? இந்தக் கேள்விகளை எழுப்பும் நான் இந்தப் போராட்டத்தில் எப்படி பங்கேற்கப்போகிறேன்? ஏன்?
இது வரை கேட்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இனி கேளுங்கள். திருப்திகரமான பதில் கிடைக்கும்வரை, மெழுகுவர்த்தியையும் தீப்பெட்டியையும் தேடவேண்டாம்.

மற்றவர்களை இம்ப்ரஸ் பண்ணனுமா???

7 செப்டெம்ப்ர், 2011

"என் வழி தனி வழி, எனக்கு எதைப்பற்றியும் கவலை கிடையாது." என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது, "என் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாரையும் இம்ப்ரஸ் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. நான் இப்படித்தான். பிடித்தால் பேசு, இல்லாவிட்டால் ஓடிப்போ." என்று நிறையபேர் சொல்வார்கள். இப்படி இவர்கள் சொல்லிவிட்டாலும், எல்லா மனிதனின் உள் மனதிலும் அடுத்தவர்களை எப்படியாவது இம்ப்ரஸ் செய்து விட வேண்டும் என்ற ஒரு ஆவல் உண்டு என்பதே உண்மை. அது மனித இனத்துக்கே உரிய ஒரு குணம். தனது செயல்களுக்கு குறைந்த பட்சம் ஒரு பாராட்டாவது கிடைக்கவேண்டும் என்று எல்லோருமே விரும்புவர். அதன் அடிப்படை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்ற எண்ணம்தான். 

கீழே நான் கேட்டிருக்கும் சில கேள்விகளை உங்களை பார்த்து நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 
  1. நிறைய நண்பர்கள் வேண்டும் என்று நினைத்ததுண்டா?
  2. நண்பர்கள் உங்களிடம் எல்லா பெர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களா?
  3. ஒரு பொது இடத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டும் என்று நினைத்ததுண்டா?
  4. உங்களுடைய வருகை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டா?
  5. எல்லோரும் உங்களை ஜெண்டில்மேன் அல்லது ஜெண்டில்வுமன் என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 
  6. திருமணம் அல்லது ஏதாவது பொது நிகழ்ச்சியில், ஏதாவது ஒரு பெண்ணாவது/பையனாவது நம்மை திரும்பி பார்க்கவேண்டும் என்று நினைத்ததுண்டா? 
  7. மொத்தத்தில் எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 
இதற்கு பெரும்பாலான பதில்கள் ஆம் என்று இருந்தால் மட்டும் மேலும் தொடரலாம். 
பெரும்பாலானவர்களுக்கு மேலே நான் கேட்ட கேள்விகளுக்கு ஆம் என்றே சொல்ல தோன்றும். எல்லா மனிதர்களுமே அடுத்தவர்களை ஏதாவது ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்து விடவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கென வெகுவாக மெனக்கெடுகிறார்கள். தங்கள் உடை விஷயத்தில், பேச்சு, பாவனை ஆகியவற்றில் வலுக்கட்டாயமாக ஒரு நாகரிக தோரணையை பூசுகிறார்கள். நட்பு வட்டாரத்தில் ஒரு சென்டர் ஆப் அட்ராக்சன் அதாவது எல்லோருடைய கவனமும் நாம் மீதே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கவுதம் மேனன் ஸ்டைலில் சொன்னால், எங்கே போனாலும் அந்த இடத்தை ஆளனும் என்று நினைக்கிறார்கள். "அப்படியெல்லாம் கிடையாதப்பா, அடுத்தவங்களை இம்ப்ரஸ் பண்ணி நான் என்ன பண்ண போறேன்?" என்று சொல்பவர்கள் ஒன்று பொய் சொல்கிறார்கள் அல்லது தாழ்வு மனப்பான்மையில், பேசுகிறார்கள் என்று அர்த்தம். 
சரி இம்ப்ரஸ் பண்ணுவதற்கு ஆசை இருப்பது ஓகே. ஆனால் எப்படி செய்வது? இந்த குழப்பம் பலருக்கு உண்டு. தான் சரியாக செய்வதாக நினைத்துக்கொண்டே சொதப்பி, பல்பு வாங்குபவர்கள் உண்டு. கீழே நான் சொல்லி இருக்கும் சில வழிமுறைகள், நான் சொந்தமாக யோசித்தது கிடையாது. சில புத்தகங்களில் படித்தவையே. ஆனால் பெரும்பாலானவையை நானே பின்பற்றி இருக்கிறேன். 
எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது... 

மிகப்பெரிய கடினமான காரியம். இன்னும் சொல்லப்போனால் நடக்காத காரியம். எல்லோருக்கும் நல்லவனாக இருக்கவே முடியாது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நல்லவனாக இருக்க முடியும். மனிதர்களிடம் ஒரு ஈகோ உண்டு. அதாவது தன்னை பற்றி பெருமையாக எண்ணிக்கொள்வது. உதாரணமாக இரண்டு வேறு துறைகளில் இருப்பவர்கள் சந்தித்துக்கொண்டார்களானால், தத்தமது துறைகளை பற்றியே பேசுவார்கள். அது நிறையோ குறையோ எதுவானாலும், தன்னைப்பற்றி, தன்னை சார்ந்தவை பற்றி பேசுவதையே விரும்புவார்கள். அதே போல, எதிரே இருப்பவர்களின் சொந்த புராணத்தை கேட்க விரும்ப மாட்டார்கள். ஆகவே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், பேசுவதை விட்டு விட்டு கேட்க தொடங்குவது. யாரை சந்தித்தாலும் அவரைப்பற்றி விசாரித்து பேச்சை தொடங்குங்கள். உங்க வேலை எப்படி போகிறது? என்பதில் தொடங்கி, அவர்கள் தொழிலுக்கே உரிய சில நடைமுறைகளில் சந்தேகம் கேட்பது போல கேளுங்கள். உடனே அவர்கள் மட மடவென பேச தொடங்குவார்கள். நீங்கள் அசராமல் கேட்டுக்கொண்டே இருங்கள். (கொஞ்சம் கஷ்டம்தான்). இடையில் குறுக்கிடக்கூடாது. அவர் முடிக்கும்வரை காத்திருங்கள். முடிவில் உங்களைப்பற்றி விசாரிப்பார். பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்பார். பிறகு எங்கு பார்த்தாலும் உங்களை நலம் விசாரிப்பார். உங்களை பற்றி எல்லோரிடமும் நல்ல விதமாக சொல்வார். மாறாக எடுத்த எடுப்பிலேயே உங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தால், மனிதர் கடுப்பாகி விடுவார். 
கவனம்: புதியவர்களோடு பேசும்போது, பெர்சனல் கேள்விகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடும். கேள்விகள் அசட்டுத்தனமாக இருப்பதையும் தவிர்த்து விட வேண்டும்.
விசாரிப்பதோடு நின்றுவிடாமல், அவர் சொல்வதை ஆர்வமாக கேட்கவேண்டும். நம் முக பாவனைகள் அவருக்கு மேலும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கவேண்டும். அவர் வருத்தப்பட்டு பேசும்போது நாம் சிரித்து விடக்கூடாது. கேள்விகள் அக்கறையோடு கேட்பதாக இருக்கவேண்டும். ஏதோ சிபிஐ அதிகாரி மாதிரி கேட்க கூடாது.  எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம், அவரது மன நிலை தெரியாமல் தொண தொண என்று கேட்டு கொண்டிருக்க கூடாது. கொஞ்சம் கடினமான வழிமுறைதான் ஆனால் மிகவும் பலன் தரக்கூடியது. 
நட்பை பலப்படுத்துவது.... 

ஒருவரோடு ஏற்கனவே ஒன்றிரண்டு முறை பேசி இருப்போம். திடீரென்று ஒருநாள் சந்திக்கும் நிலை வரலாம். அப்போது டக்கென்று அவரது பெயரை சொன்னால் மனிதர் உச்சி குளிர்ந்து போவார். இருப்பதிலேயே மிகவும் கடினமான விஷயம் அடுத்தவர் பெயரை ஞாபகம் வைத்திருப்பது. அதே போல மிக மகிழ்ச்சி தரும் விஷயம் ஒருவர் நமது பெயரை ஞாபகம் வைத்து சொல்வது. இதற்கு முதலில் ஒருவரின் பெயரை கேட்டவுடன் ஒருமுறை நாமும் உச்சரிக்க வேண்டும். பிறகு அதை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். வெகு நாட்களுக்கு பிறகு அவரை சந்திக்கும்போது பெயரை சொல்லி, முதல் சந்திப்பில் நடந்த சுவாரசியமான விஷயத்தையும் கூறினால், பிறகு அவர் வாழ்நாள் முழுக்க உங்களை மறக்கவே மாட்டார். 
நாம் கலகலப்பாக பேசாவிட்டாலும், அடுத்தவர்களின் கலகலப்பை ரசிக்கத்தெரிய வேண்டும். சும்மா உம்மென்று இருந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள். நம் உள் உணர்வுகளை நண்பர்களிடம் வெளிக்காட்டுவதில் தவறே இல்லை. ஆனால் அது மிக நெருங்கிய நண்பர்களோடு மட்டும் என்பதில் நினைவில் கொள்க. நம்மோடு நெருங்கி பேசுபவர்கள் எல்லாம் நெருங்கிய நண்பர் ஆகிவிட மாட்டார்கள். உதாரணமாக உங்கள் அலுவலகத்தில் பணி புரிபவர் உங்களோடு நன்கு பழகுவார். ஒரு நாள் மேனேஜரை உங்கள் முன்னாலேயே திட்டுகிறார் என்றால், நீங்கள் அதற்கு பதிலாக ஒரு புன்னகை புரிந்து விட்டால் போதுமானது, அதை விட்டு விட்டு, நீங்களும் உங்கள் பங்குக்கு ஏதாவது சொல்லப்போக, அது நேரே மேனேஜர் காதுக்கு போகும் அபாயம் உண்டு. அலுவலகத்தில் இந்த மாதிரி போட்டு வாங்கும் பார்த்திபன்கள் அதிகம். எனவே இந்த மாதிரி நேரத்தில் நழுவுகிற மீனாக இருப்பதால் உங்கள் பெயர் கெட்டு விடாது. மாறாக நல்ல பெயரே கிடைக்கும். 
இளைஞர்களே.... 
வாலிப வயதினர், எதிர் பாலினத்தை இம்ப்ரஸ் செய்வதே முழு நேர தொழிலாக கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான். நாம் இயல்பாக இருப்பதே நல்லது. அதுதான் சவுகர்யமும் கூட. அநியாயத்துக்கு சீன் போட வேண்டிய அவசியம் இல்லை. பெண்களுக்கு ஜோக் அடிக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும், ஆனால் அதை விட ஜெண்டில்மென்களை அதிகம் பிடிக்கும். உங்களுக்கு ஜோக் வரவில்லை என்றால். மெனக்கெட்டு முயற்சிக்காதீர்கள். அதற்காக நரசிம்மராவ் மாதிரி உம்மென்றும் இருக்காதீர்கள். மெல்லிய புன்னகையை முகத்தில் தவழ விடுங்கள். பேசும்போது எக்ஸ்பிரேஸ்ஸிவாக பேசுங்கள். முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் பேசாதீர்கள். நாம் சொல்லும் விஷயத்தின் கருத்தை நாம் முகத்தின் பாவனையிலேயே காட்டி விடலாம். அப்படி பேசினால், எல்லோரும் உங்கள் முகத்தை ரசிப்பதை தடுக்க முடியாது. 
அதே போல எந்த ஒரு இளைஞனும், கலகலப்பான பெண்ணை விரும்புவான். ஆனால் அதை விட அதிகமாக சாந்தமான பெண்ணை விரும்புவான். மேக்கப் போடும் பெண்ணை முதலில் கவனிப்பான். ஆனால் இயல்பாக இருப்பவர்கள் மீதே இம்ப்ரஸ் ஆகிறான். வளவள என்று பேசும் பெண்ணுடன் பேச எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் நிதானமாக பேசும் பெண்ணோடுதான் நட்பு பாராட்டுவார்கள். 
உங்கள் நண்பர்கள் உங்களோடு பெர்சனல் விஷயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் இயல்பாக இருப்பதே நல்லது. அதே போல இன்னொருவரின் பெர்சனல் விஷயத்தை நண்பரிடம் சொன்னால், அது உங்கள் மீது அவ நம்பிக்கையை உருவாக்கி விடும். நம்முடைய விஷயத்தையும் இப்படித்தான் யாரிடமாவது சொல்லிவிடுவானோ? என்று நினைப்பார்கள். 
மேலே சொன்னவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று. எப்போதும் திறந்த மனதுடன், இயல்பான புன்னகையோடு நாம் நடந்து கொண்டால், எல்லோருமே நமது நடவடிக்கைகளில் இம்ப்ரஸ் ஆவார்கள். நமக்கு நிறைய உண்மையான நண்பர்கள் கிடைப்பார்கள். 
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

டெல்லி குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்....

புதுடெல்லி செப் 7
 
டெல்லி ஐகோர்ட் 5 வது நுழைவுவாயில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பலியானார்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
 
படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் ராம் லோகியா மருத்துவமனையிலும் சத்ரப் சங் மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டு உள்ளனர்.
 
காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி ராம் லோகியா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிவருகிறார்.