Wednesday, September 7, 2011

காணொளி மூலம் கலெக்டரிடம் புகார்!!!!

விழா மேடையில்
மதுரையில் ‘தொடுவானம்’ திட்டம் கடந்த 20-ம் தேதியன்று மிகச் சிறப்பாக துவங்கி வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் கனவுத் திட்டம் இது.
‘தமிழ் உலகம் அறக்கட்டளை’ என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் ஆர்வலருமான ஆல்பர்ட் பெர்ணாண்டோ இந்த தொடுவானம் திட்டம் சாத்தியமாக பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இணைய வல்லுநரும், தமிழ் இணைய முன்னோடியுமான கோபாலகிருட்டிணன், செல்வ. முரளி, நாகமணி ஆகியோர் இணைய தள வடிவமைப்பு மற்றும் தொடுதிரை வடிவமைப்பில் பாடுபட்டிருக்கிறார்கள்.  திருநாவுக்கரசு, பேராசிரியர் சரவணன், கவிதாயினி மதுமிதா, திருப்பதி, ‘சங்கமம்’ விஜய்,  கவிஞர் துரை.ந.உ, பஜ்ரங்கபதி, ப்ரித்பால்சிங் ஆகியோர் தமிழ் உலகம் அறக்கட்டளையின் சார்பில் தன்னார்வலர்களாக பயிற்சியளித்தார்கள்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் இவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
துவக்க விழாவன்று காணொளியின் மூலம் கிராமப்புறத்திலுள்ள மூதாட்டி ஒருவரிடம் பேசினார் கலெக்டர். தனக்கு முதியோர் உதவித் தொகை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் தன்னைக் கவனித்துக் கொள்வதில்லை என்றும் அவர் கலெக்டரிடம் கூறினார். “உதவித் தொகைக்கு ஆவண செய்கிறேன். உனது மகனையும் சட்டப்படி உள்ளே தள்ள ஏற்பாடு செய்கிறேன்” என்று கலெக்டர் கூறியவுடன், “ஐயா, அவனை எதுவும் செய்துடாதீங்க” என்று அந்த மூதாட்டி அவசர அவசரமாக மறுத்தார். அதான் தாய்ப் பாசம்!
இதே போல மேலும் ஒரு சிலர் காணொளி மூலம் கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்கள். அனைத்திற்கும் உடனடி ஆக்‌ஷன் எடுக்க உத்தரவிடப்பட்டது!
@thoduvanam என்ற ட்வீட்டர் ஹேண்டில் மூலமாக ட்வீட்டரில் மேற்படி நிகழ்வை தொடர்ந்து கொண்டிருந்த இணைய தள நேயர்கள், “முதல்வன் திரைப்பட பாணி அசத்தல் இது” என்று கமெண்ட் அடித்தார்கள்.  இதனையும் கலெக்டரிடம் கூறிய போது, “அப்படியெல்லாம் இல்லைங்க. மக்களுக்கு எதுவுமே தடை படக்கூடாது. அவர்களுக்கு நல்லது செய்யத்தான் நாம் இருக்கிறோம். தமிழக அரசு ஏராளமான நலத் திட்டங்களை மக்களுக்காக அறிவித்துக் கொண்டிருக்கிறது. அதன் பலன் அடித்தட்டு மக்களுக்கும் தங்கு தடையின்றி எடுத்துச் செல்லும் பணி தான் என்னுடையது!” என்றார் தன்னடக்கமாக!
தொடுவானம் நிகழ்ச்சி மதுரையில் வெற்றிகரமாக துவங்க  உதவி ஆட்சியர் ராஜாராம், ஆட்சியரின்  உதவியாளர் சிவக்குமார், பஞ்சாயத்து உதவி இயக்குனர்  ரம்யாதேவி, உதவியாளர் சங்கரநாராயணன், ஓட்டுநர் கோபால் ஆகியோர் இராப்பகலாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் மற்றும் அனைத்து அலுவலகர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளும் தமிழ்பேப்பர் சார்பில்!
இந்தத் திட்டம் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே அவா! முதல்வர் கவனம் எடுக்க வேண்டும்!
***
’சத்துணவுத் திட்டம்’ போலவே விரைவில் காலையிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப் படவிருக்கிறதாம்!
காமராசர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத்திட்டத்தை இன்னமும் பரவலாக பலரும் பயன் பெரும் வகையில் மாற்றியமைத்து ‘சத்துணவுத் திட்டம்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தி ஒரு அமைதிப் புரட்சியை உண்டு செய்தார் எம்.ஜி.ஆர்.
மதிய உணவுடன் முட்டை, முட்டை சாப்பிடாமல் முரண்டு பிடிப்பவர்களுக்கு வாழைப்பழம் என்று சத்துணவுத் திட்டம் பல பரிணாம வளர்ச்சிகளை அடைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது சத்துணவை எப்படி ருசியாக வழங்குவது என்று பிரபல சமையல் கலை வல்லுநர் தாமோதரன் மூலமாக வகுப்புகள் எல்லாம் கூட எடுக்கப்பட்டது.
தமிழகத்தை முன்மாதிரியாக வைத்து பல மாநிலங்களிலும் இப்போது சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இப்போது தமிழக அரசு காலை உணவையும் பள்ளிகளில் வழங்கலாம் என்று யோசித்து வருகிறதாம். திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது.
அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் இலவசங்களை ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் உண்மையிலேயே மிக நல்ல திட்டம். வரவேற்க வேண்டிய திட்டம்! வரவேற்போம்!
***
அரசியல், திரையுலகம், கல்வி இவைகளைத் தவிர வளம் கொழிக்கும் துறை ஒன்றும் நம் நாட்டில் இருக்கிறது. அதான் வழிபாட்டுத் தலங்கள். ஒருவேளை விளக்கு ஏற்ற தீக்குச்சி வாங்கக்கூட காசு இல்லாத பல்லாயிரக்கணக்கான கோவில்களும் இருக்கின்றன. அதே சமயத்தில் உண்டியலில் விழும் சில்லறையை மெஷின் வைத்து திணறத் திணற எண்ணும் கோவில்களும் இருக்கின்றன.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழகத்தின் பெரும்பாலான கோவில்கள் இருக்கின்றன. இந்தத் துறை ஆரம்பிக்கப்பட்ட அன்றே கோவில்களில் அரசியல் புகுந்து விட்டது.
என்றைக்கு அரசியல் புகுந்ததோ அன்றைக்கே மரியாதையும் வெளியேறி விட்டது. மன அமைதிக்காகத்தான் மக்கள் இருக்கும் இடத்தை விட்டு கோவிலுக்குச் செல்கிறார்கள். அங்கே வாசலிலிருந்து கருவறை வரை கிடைக்கும் ‘மரியாதை’ பெரும்பாலான நேரங்களில் தன்மானத்தைச் சீண்டுவதாகவே அமைந்து விடுகிறது. வீட்டிலேயே கடவுளை நினைத்து நிம்மதியாக இருந்திருந்தால் கூட அந்த மன சங்கடங்கள் மிச்சமாகியிருக்கும். என்ன செய்வது? ஆட்டு மந்தைக் கூட்டங்களுக்கு எத்தனை பட்டாலும் திருந்த மனம் வராது தான்!
சரி.. விஷயத்துக்கு வருவோம்.
இனிமேல் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களை மனம் நோகாமல் வரவேற்று, தரிசனம் செய்து திரும்பச் செய்ய வேண்டும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறதாம். இதற்காக திருக்கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம். அதே போல கோவில் பணியாளர்களுக்கு யூனிஃபார்ம் வழங்கும் திட்டமும் அரசுக்கு இருக்கிறதாம். அர்ச்சகர்களுக்கும் இந்த பயிற்சி, யூனிஃபார்ம் வழங்குவார்களா?!
***
கடந்த ஆட்சியில் தோட்டா தரணியின் பேருதவியால் பெரும் செலவில் கட்டப்பட்ட தலைமைச்செயலகத்தை, ‘அரைகுறை கட்டிடம்’ என்று இந்த அரசில் கண்டு கொள்ளவேயில்லை!
இப்போது மேற்படி மவுண்ட் ரோடு தண்ணித் தொட்டியை ’சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை’யாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘அம்புட்டு செலவு செய்து கட்டிய கட்டிடம் வேஸ்டாகப் போய் விட்டது’ என்று இனிமேல் யாரும் நாக்கு மேல் பல்லு போட்டு பேச முடியாது.
‘நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டிடம் அது” என்று ஏதோ ஒரு உலகப் புகழ்பெற்ற காலேஜில் படித்து இன்ஜினியர் பட்டம் பெற்ற முன்னாள் முதல்வர் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், “அந்தக் கட்டிடம் ஸ்ட்ராங்கா இல்லைன்னு சொல்லிட்டு தானே பழைய தலைமைச் செயலகத்துக்கே போனாங்க. அந்த ஓட்டைக் கட்டிடத்திலேயா மருத்துவமனையும், காலேஜும் கொண்டு வரப் போறாங்க?” என்று திமுகவினர் கேட்கும் கேள்வி செம லாஜிக்! இதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு! எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம்!!

No comments:

Post a Comment