Wednesday, September 7, 2011

ஜம்மு வரை ‘அம்மா’.......



‘நம்பிக்கை சின்னமாம் தும்பிக்கை நாயகனின் அருளால் வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தவழட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறையட்டும். திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
மற்றவர்களைப் போல நோன்பு கஞ்சியை மட்டும் குடித்து விட்டு வந்து, ரம்ஜானுக்கு ‘ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சிகள்’ என்றும் விநாயகர் சதுர்த்திக்கு ‘விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்’ என்றும் தொலைக்காட்சியில் அறிவிக்க வைக்கும் கேப்மாறித்தனம் இல்லாமல் அனைவரையும் ஒன்றாகப் பாவிக்கும் முதல்வருக்கு வாழ்த்துகள்!
***
அரசியல் சாணக்கியர் என்ற பட்டத்தையும் வெற்றிகரமாக அம்மா வென்று விட்டார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு தண்டனைக் குறைப்பை செய்ய தமிழக அரசுக்கு சட்டப்படி இடமில்லை என்று முதல் நாள் சொல்லி விட்டு, மறுநாள் ‘அவர்கள் தண்டனையைக் குறைக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததன் மூலம் ஒரே பந்தில் சிக்ஸர், ஃபோர் என்று விளாசித் தள்ளி விட்டார். யாருமே எதிர்பாராத திருப்பம் இது!
***
செப்டம்பர்-2-ம் தேதியிலிருந்து சென்னை தவிர எஞ்சிய தமிழகமெங்கும் அரசு கேபிள் தனது சேவையைத் தொடங்குகிறது. சென்னையைத் தவிர ஏனைய இடங்களில் சன் டிவி கட்டண சானல் என்பதால் இப்போதைக்கு சன் டிவியைப் பார்க்க முடியாது. இது சன் டிவிக்கு பிரச்னையாகுமா அல்லது சன் டிவியின் சீரியல்களில் அடிமைப்பட்டு விட்ட மக்கள் அதை விட முடியாமல் அரசு கேபிளை புறக்கணிப்பார்களா என்பது போகப் போகத் தான் தெரியும். ஒரு சில இடங்களில் இந்தப் பிரச்னையால் DTH விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கட்டண சானல்களையும் அரசு கேபிளில் இணைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றதாம். பார்க்கலாம்!
***
அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறதாம். இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இப்போது உருவாகியிருக்கும் சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அக்டோபரில் தேர்தலை நடத்தினால் நல்ல அறுவடை செய்யலாம் என்று ஜெ. முடிவெடுத்திருக்கிறாராம். அதற்குள் இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டமும் நடைமுறைக்கு வந்து விடும் என்பதால் தான் இப்படி ஒரு முடிவு.
திமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கியத் தலைவர்கள் வரிசையாக ‘உள்ளே’ போய்க்கொண்டிருக்கும் நேரம் இது. எனவே இப்போது தேர்தல் வந்தால் களப்பணியாற்றக் கூட யாரும் இருக்க மாட்டார்கள் என்பதும் ப்ளஸ் பாயிண்ட் என்பதால் இப்படி ஒரு முடிவாம்.
எப்படியும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் ‘அம்மா’ தான் அறுதிப் பெரும்பான்மை பெறுவார் என்பது எதிர்பார்க்கும் ஒன்று தான்!
***
‘தமிழக சட்டசபையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது போல ஜம்மு காஷ்மீர் சட்டசபையிலும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்க கோரலாமா?’ என்று கேட்டுள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வழக்கம் போல கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இது எதிர்பார்த்த ஒன்று தான். ஏன் இன்னமும் கசாப்பிற்கும் மன்னிப்பு கேட்டு கோரிக்கை எழவில்லை என்று தெரியவில்லை!
இதற்கு சரியான பதிலடியை முதல்வர் ஜெ. உடனடியாகத் தர வேண்டும்!

No comments:

Post a Comment