ஊழல் பெருகிவிட்டது என்பதிலும், அரசியல் அமைப்புகளும் அதிகாரிகளும் ஊழல்வாதிகளாகிவிட்டனர் என்பதிலும் அவர்களைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்பதிலும் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கமுடியாது. ஆனால், இருக்கின்றன சட்டங்கள் போதாது என்று சொல்லும்போதும், நிறைவேற்றும் முறைகளில் நிறைய போதாமைகள் இருக்கின்றன என்று சொல்லும்போதும், ஒரு புதிய சட்டம் தேவை என்று வாதிடும்போதும் சில விஷயங்களை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
அண்ணா ஹசாரேவின் போராட்டம் சந்திக்கும் கருத்தியல் பிரச்னை இதுதான். முதலில் அவருடைய வழிமுறையை அலசுவோம். ஊழலை ஒழிக்க ஒரு வடிவத்தினைக் கொடுத்து இதை இப்படியே நிறைவேற்றித் தர வேண்டும் என குடியரசு அமைப்பான நாடாளுமன்றத்தில் அண்ணா முறையிடுகிறார். முறையிடுகிறார் என்பதைவிட நிர்பந்திக்கிறார் என்பது பொருத்தமான பிரயோகமாக இருக்கும். இதைத்தான் காந்திய வழிப் போராட்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
யாரையும் நான் துன்புறுத்தவில்லை, என்னை நானே வருத்திக் கொள்கிறேன். இதில் தியாகம் அடங்கியிருக்கிறது. எனது கோரிக்கை தனி மனித ஆசை இல்லை. தேசம் முழுவதும் ஒருமித்த குரலில் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. அதனை நான் ஒருங்கிணைத்தேன். எனவே இது அமிம்சைப் போராட்டம். காந்தியின் வாதம் இது. அண்ணாவும் இதையே செய்வதால், அவருடைய போரட்டமும் காந்திய வழிப் போராட்டம் என்றே அறியப்படுகிறது.
ஆனால் நடைமுறை சாத்தியங்களை யோசிக்காத அல்லது யோசித்தும் அதைக் குறித்து கவலைப்படாத போராட்டத்தை காந்தியத்தின் பெயரால் அழைப்பது சற்று விந்தையாகவே இருக்கிறது. ஒரு மசோதா தாக்கலாகி சட்டம் என்னும் நிலையினை அடைவதற்கு, கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
ஒரு கோரிக்கை மசோதா வடிவம் பெற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கே நடைமுறைகளைக் கடந்து ஒப்புதலைப் பெறுகிறது. பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குச் செல்கிறது. அவரது ஆலோசனைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை மேற்கொண்டு விவாதிக்கவேண்டியிருந்தால் மீண்டும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. விவாதங்கள் நடைபெறுகின்றன. குறிப்பிட்ட வடிவம் ஏற்கப்படுகிறது. அல்லது, திருத்தப்படுகிறது. இந்த வடிவம், மீண்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குச் சென்று, ஒப்புதல் பெறப்பட்டு பிறகே சட்டமாகிறது.
ஆனால் அண்ணா, அதெல்லாம் கூடாது என்கிறார். நான் கொடுப்பதை அப்படியே நிறைவேற்று என்கிறார். நடைமுறை சாத்தியங்களும், முறைகளும் அவர்களுக்கு முக்கியமாகப்படவில்லை. இது எப்படி காந்திய வழியாகும்?
நாடாளுமன்ற நடைமுறைகளைக் கருத்தில் கொண்டே அரசும் பிரதமரும் அண்ணா ஹசாரேயின் குரலுக்கு அப்படியே செவிசாய்க்காது இருந்தனர். பல கட்சிகள் அங்கம் பெற்றுள்ள நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து, இறுதி வடிவம் காண வேண்டிய ஒரு பொருண்மையின் மீது, அவ்வண்ணம் செய்யாது எந்த உறுதி மொழியும் தர இயலாது எனும் யாதார்த்தத்தைதான் பிரதமர் அண்ணா ஹசாரேவுக்குப் புரிய வைக்க முயன்றார்.
நாடாளுமன்றம் ரிஸல்யூஷன் எனும் அளவில் அண்ணா ஹசாரே குழுவினருக்கு தகவல் தெரிவித்தவுடன் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. விவாதித்து ஓட்டெடுப்பு நடத்தி அதன் பிறகு மோஷன் என தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அண்ணாவின் பக்கமிருக்கும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே குறிப்பிட்டதை இங்கே கவனிக்கவேண்டும். இரண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
பொது மக்கள் கருத்தை அறியாது, அவர்களது பிரதிநிதிகள் சொல்வதை வைத்து சட்டம் இயற்றலாமா?
நாடாளுமன்ற நடைமுறையில் நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் போன பின்பு ஒரு மசோதாவின் வடிவம் அரசிதழில் வெளியாகி, பொது மக்கள் கருத்துகளை வரவேற்று நாளிதழில் விளம்பரங்கள் வருவதை கவனித்திருக்கலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது எப்படி? சமூக அமைப்புகள் நிலைக்குழுவிடம் நேரிடையாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வு, அதன் அறிக்கைகள் ஆகியவற்றை விளக்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அமைச்சரவையின் முன்பு தங்கள் தரப்பினை சொல்லவும் வாய்ப்பளிக்கப்பட்டது . இந்த நடவடிக்கைகளை முன்னின்று செயலாற்றிய திருமதி அருணா ராய், இப்போது அண்ணாவின் பக்கம் இருக்கிறார். ஆனால் அண்ணாவின் பிடிவாதங்களோடு ஒத்துப் போகாமால் இருக்கிறார்.
எந்த ஒரு சட்டமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்துகளுக்கு முரண்படாதிருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஹசாரே முன் வைக்கும் ஜன் லோக்பாலின் அம்சங்களை அரசமைப்பு சட்டத்தின் ஷரத்துகளோடும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் வழிகாட்டுதல்களோடும் பொருத்திப் பார்க்கும் போது, சில சிக்கல்கள் தெரியவரும். அண்ணா ஹசாரேவின் மசோதாவை திருத்தமின்றி ஏற்கவேண்டுமனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும். நடைமுறையில் இருக்கும் கிரிமினல் சட்டங்களிலும் நிர்வாக சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அல்லது அவற்றை அடியோடு கைவிடவேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் திருத்தம் என்பது பெரும்பாலான சமயங்களில் நாடாளுமன்ற நடவடிக்கை எல்லைக்குள் முடிந்து விடும். சில ஷரத்துகளை திருத்தும் சமயம் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் பாதி அவற்றின் சட்ட மன்றங்கள் மூலம் குறிப்பிட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நடைமுறையில் இருக்கும் கிரிமினல், நிர்வாகச் சட்டங்களைத் திருத்துவதும் கைவிடுவதும் சுலபமல்ல. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவை, குடியரசு தலைவர், கவர்னர் என்று பல கட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியிருக்கும். இந்தக் கட்டங்களைத் தாண்டி, சட்டங்கள் திருத்தப்பட்டுவிட்டால் அல்லது கைவிடப்பட்டுவிட்டால், அந்தச் சட்டங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் என்ன ஆகும்?
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசுத் தரப்பு அண்ணாவின் கோரிக்கையை அப்படியே ஏற்பதற்கு பதில், விவாதிக்கலாம் என்று முடிவு செய்தது. அண்ணாவின் உண்ணாவிரதமும் முழக்கங்களும் பாடல்களும் முடிவடைந்தன. கூட்டம் கலைந்தது.
பிரச்னை என்னவென்றால், அண்ணாவுக்காகத் திரண்ட கூட்டத்தினருக்கு இந்தச் சிக்கல்கள் புரியவைக்கப்படவில்லை. கிரண்பேடி, அண்ணா ஹசாரேவுக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேலி செய்து முக்காடு போட்டுக் கொண்டு நடித்துக் காண்பித்தார். போகட்டும். அண்ணா, அண்ணா என்று குரல் கொடுத்தபடி திரண்டு வந்த மக்கள் யோசித்திருக்கவேண்டும் அல்லவா?
சமசரம் இன்றி இந்தப் போராட்டம் தொடர்வதற்கான சாத்தியங்கள் என்ன? அண்ணாவின் மசோதா நிறைவேற கடந்து செல்ல வேண்டிய தூரம் என்ன? போராட்டத் தலைமை இந்தத் தடைகளை எப்படிக் கடந்து செல்லப்போகிறது? அதன் செயல்திட்டம் என்ன? இந்தக் கேள்விகளை எழுப்பும் நான் இந்தப் போராட்டத்தில் எப்படி பங்கேற்கப்போகிறேன்? ஏன்?
இது வரை கேட்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இனி கேளுங்கள். திருப்திகரமான பதில் கிடைக்கும்வரை, மெழுகுவர்த்தியையும் தீப்பெட்டியையும் தேடவேண்டாம்.
No comments:
Post a Comment