Wednesday, September 7, 2011

சன் டிவி தெரிகிறதா????



கடந்த சில நாள்களாக சென்னை நீங்கலாக ஏனைய தமிழக மக்களுக்கு தலையாயப் பிரச்னை ‘அரசு கேபிளில் சன் டிவி தெரியவில்லை’ என்பது தான்! சன் டிவி உள்ளிட்ட சில சானல்கள் சென்னை தவிர ஏனைய இடங்களில் கட்டண சானல்களாக உள்ளன. எனவே அவற்றை இன்னமும் அரசு கேபிளில் இணைக்கவில்லை. இப்போதைக்கு இலவச சானல்கள் மட்டுமே அரசு கேபிளில் இடம் பெற்றுள்ளன.
சன் டிவியிலே டி.டி.ஹெச். தொழில்நுட்பம் ஆரம்பிச்சதே இந்த மாதிரியான பிரச்னைகள் வந்தால் எப்படி தப்பிச்சுக்கலாம் என்பதற்காகத் தான் என்றும் மக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சன் டிவி பார்க்க முடியாததால் ஓரிரு நாள்களில் டி.டி.ஹெச். வாங்க ஆரம்பித்து விட்டவர்களும் உண்டு.
மக்களின் நாடி பிடித்துப் பார்க்க தவறிவிட்டது அரசு. அவர்கள் ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருக்கும் சானல்களைக் குறைக்காமல் குறைந்த விலையில் இந்த சேவையை வழங்கியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் அரைகுறையாக ஆரம்பித்திருப்பது அரசின் முந்திரிக்கொட்டைத்தனத்தை தான் காட்டுகிறது! கேபிள் பிரச்னைக்கு உடனடியாக ஒரு முடிவு எடுக்காமல் உள்ளாட்சித் தேர்தல் கொண்டு வந்தால் பல இடங்களில் ‘அம்மா’ கட்சி டெபாசிட் இழக்க நேரிடும் என்பது உண்மை!
***
‘ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுகிறார். நீ இருக்கும்போது என்ன செய்தாய் இவர்களைக் காப்பாற்ற? முத்துக்குமார் இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி தீக்குளித்து இறந்தபோது, நாங்கள் போராடியபோது,தெருவில் இறங்கி கொடி பிடித்தபோது போலீசை விட்டு எங்கள் மீது வழக்கு போட்டு எங்களைத் தடுத்தீர்கள். அன்று எங்களை விட்டிருந்தால் போராட்டம் நடத்தி போரைத் தடுத்து நிறுத்தியிருப்போம். செய்யவிடவில்லை. அதனால் ஆட்சியை இழந்தாய். எங்கள் அம்மா முதல்வரானார். தோழி செங்கொடி தீக்குளித்து இறந்தார். இந்த மூன்று உயிர்களை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்ற தெருவில் இறங்கி போராடினோம். எங்கள் மீது எந்த வழக்கையும் போடவில்லை. அதற்கு பதில் மூன்று உயிர்களை காப்பாற்றித் தந்துள்ளார். அவர்தான் தமிழினத்தின் தலைவி’ இப்படி பேசியிருக்கிறார் சீமான். இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள் முதல்வரம்மா?
நம்மூரில் மட்டும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஜெ – கருணாநிதி, ஆரியம் – திராவிடம், அடிப்பொடி – அல்லக்கை என்று இரண்டு தரப்பாக எதிர் தாக்குதல் நிகழ்த்தி பேசாமல் இருக்கவே முடியாது. ஒன்று இந்தப் பக்கம், இல்லாவிட்டால் அந்தப் பக்கம் என்ற முன்முடிவுகளோடு தான் எல்லாமே, எல்லாருமே பேச ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களாகவே எதிர் கருத்து கொண்டவர்களை எதிர் தரப்புக்கு கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள்.
***
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும், தூய்மை பகுதியாக வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதன்படி அனைத்து கோவில்களிலும், வளாகத்தில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தக்கூடாது. பக்தர்களுக்குக் கொடுக்கும் பூஜை கூடை மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கூடையாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல எந்த பூஜை பொருட்களும் பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றியிருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களிலும் இது குறித்து அறிவுப்பு பலகைகளை வைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இதே போல, கடந்த 1ம் தேதி முதல் பெரிய வர்த்தக நிறுவனங்களில் மக்களுக்கு வழங்கப்படும் பொருள்களுக்கான பிளாஸ்டிக் பையை இலவசமாக வழங்கக்கூடாது. அவற்றுக்கும் காசு வாங்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. காசு கொடுத்து வாங்க வேண்டுமென்றால் மக்கள் கண்டிப்பாக அதன் பயன்பாட்டை குறைக்க ஆரம்பிப்பார்கள். நல்ல திட்டம் தான். வரவேற்போம்!
***
‘ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களால் வழிநடத்தப்படும் அரசு என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்காக, ஜெயலலிதாவால் நடத்தப்படுகின்ற ஜெயலலிதா அரசாகத்தான் இந்த ஆட்சி உள்ளது’ என்று குற்றம் சாட்டியுள்ளார் கடந்த ஐந்தாண்டு காலம் மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட ஆட்சியின் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் குறள் எல்லா ஆட்சியர்களுக்கும் சாலப் பொருந்தும். போன முறை எதிர்கட்சியாக இருந்த போதிலும், ஜெ எந்த ஒரு விஷயத்திலும் மக்கள் மத்தியில் இறங்கிப் போராடவில்லை. கொடநாட்டில் சென்று ரெஸ்ட் எடுத்ததோடு சரி. முதல்வர் ஆன பிறகு அந்த ரெஸ்ட் தேவைப்படவில்லை போலிருக்கிறது. ஐந்தாண்டுகளில் மூச்சுக்கு முன்னூறு தடவை கொடநாட்டுக்குப் போன ஜெ இப்போது ரெஸ்ட் எடுக்க தேவையில்லாத பரிபூரண உடல் நலத்துடன் இருக்கிறார் போல. கடவுளுக்கு நன்றி!
ஆனால் இப்போது திமுகவுக்கு எதிர்கட்சி அந்தஸ்தை கூட தமிழக மக்கள் வழங்கவில்லை. அவர்கள் கட்சிக்காரர்கள் வரிசையாக நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே சென்று கொண்டிருக்கும் வேளையில் மக்களிடம் அது குறித்து அரசின் மீது அதிருப்தி எதுவுமே சற்றும் எழவில்லை என்பதிலிருந்தே மக்கள் அந்த நடவடிக்கைகளை வரவேற்கிறார்கள் என்று தானே அர்த்தம்? இந்த வேளையில் பழைய பாட்டான ‘அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை’ என்பதையே தொடர்ந்து பாடினால் மக்களிடம் இன்னமும் அதிக வெறுப்பு தான் ஏற்படும் என்பதை முன்னாள் துணை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே வேளையில் வாரா வாரம் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படம் ரிலீஸ் செய்வதைப் போல வாரம் ஒரு முன்னாள் அமைச்சரை உள்ளே தள்ளியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காவல்துறை செயல்படுவது போலத் தெரிகிறது. இன்னும் ஓரிரு வாரங்களுக்கு இதுவே தொடர்ந்தால், மக்கள் மத்தியில் இது அரசியல் நடவடிக்கைகள் தானோ என்ற பேச்சு எழ ஆரம்பித்து விடும் என்பதையும் முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
***
பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெ. மீது நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இவ்வளவு நாட்கள் வாய்தா வாங்கியே காலம் தாழ்த்தினார் அவர். இப்போது முதல்வர் ஆகிவிட்டபடியால் அந்த வழக்கில் நேரில் ஆஜர் ஆவதிலிருந்து விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் ‘இது விசாரணையை மேலும் தாமதப்படுத்தும் வழி. எனவே விலக்கு அளிக்க முடியாது. எப்போது ஆஜராக முடியும் என்று வருகிற 12-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. எனவே நிதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் ஜெ! என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment